தெறி - கமர்ஷியல் படமா? ஆமாம்பா ஆமா.
தெறி - குடும்ப படமா? ஆமாம்பா ஆமா.
தெறி - ACTION படமா? ஆமாம்பா ஆமா.
தெறி - விஜய் ரசிகர் அல்லாதவர்களுக்கும் புடிக்குமா? ஆமாம்பா ஆமா.
கதை: (ஒரே வரியில்)
மினிஸ்டருடன் (மகேந்திரன்) மோதி தன் அம்மாவையும்(ராதிகா), மனைவியையும்(சமந்தா) பலி கொடுத்து தன் செல்ல மகளுடன் (நைனிகா) ஒதுங்கி வாழும் போலீஸ் விஜய், வில்லன் மீண்டும் சீண்டிப் பார்க்க, தெறித்து பதிலடி கொடுப்பதுதான் கதை.
கதை புதியதல்ல. ஆனால் சொல்லியவிதம் புதியது.
விஜய்க்கு மட்டுமல்ல, ஹீரோயின் சமந்தாவுக்கும் நடிக்க நிறையவே வாய்ப்பு கொடுத்த டைரக்டர் அட்லிக்கு ஒரு தேங்க்ஸ்.
காதல் காட்சியாகட்டும், குடும்ப காட்சியாகட்டும், செண்டிமெண்ட் காட்சியாகட்டும், நிறுத்தி.... நிதானமாக... feel பண்ணும்படியாக, ரசிக்கும்படியாக, கண்கலங்கும்படியாக, திருப்தியா, மனநிறைவாக
சொல்லியிருக்கிரார்கள். டாக்டர் சமந்தா, காதலி சமந்தா, மனைவி சமந்தா, மாமியாரை அம்மாவாக நினைக்கும் மருமகள் சமந்தா - இப்படி சமந்தாவுக்கும் நிறைவான காட்சிகள். (ஆனாலும் உதட்டு முத்த காட்சியையும், தொப்புள் பாடல் காட்சியையும் என்றுதான் விட போகிறார்களோ?).
பேபி நைனிகா படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட். கள்ளங்கபடமற்ற பேச்சு ரசிக்க மட்டும் வைக்காமல் காமெடியையும் அள்ளிதெறிக்கிறது. எதாவது ஐடியா இருக்கா என எமி ஜாக்சனிடம் பேசும் காட்சியிலிருந்து கடைசி காட்சியில் வில்லனிடம் sorry சொல்ல கேட்கும் எல்லாகாட்சியிலும் தூள் பரத்துகிறார்.
சிவா படத்தில் ரஜினி, வகுப்பில் புகுந்து ரகளை செய்யும் ரவுடிகளை துவைத்து எடுக்கும் காட்சியையே இங்கு விஜய் சற்று வித்தியாசமாக காமெடியாக செய்திருக்கிறார். மூன்றாம் வகுப்பு பாடத்தில் வரும் கேள்விகளை கேட்டு பதில் சொல்லாத ரவுடிகளை பின்னிஎடுப்பது நீங்கள் கூட்டி செல்லும் குழந்தைகளை நிச்சயம் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
காதல் காமெடி ஆக்சன் செண்டிமெண்ட் என எல்லாம் கலந்த கலவையாக ஒரு கலக்கு கலக்கியிருக்கிறார் விஜய். பாட்டுகளும் அதற்காக தேர்வு செய்த இடங்களும் கண்ணுக்கு குளுமை. அம்மாவை பறி கொடுத்துவிட்டு சாக்லேட் வாங்க வில்லன் கொடுத்த பத்து ரூபாயை வாங்கிகொண்டு அழும் பையன், அதே வில்லன் சாகும் போது வாங்கிய சாகலேட்டை பிரித்து சாப்பிடுவது- நச்.
பல தமிழ் படங்களில் வந்த காட்சிகளே மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு - படத்தின் மைனஸ்.
1. ஸ்கூல் பைட் சீன் - சிவா
2. வன்முறையை விட்டு ஒதுங்கி ஹீரோ வாழ்வது - தலைநகரம், பாட்ஷா
3. ஹீரோ ஹீரோயின் வில்லனால் தாக்கப்படுதல் - கஜினி
4. பிள்ளைகளை பிச்சையெடுக்க விடுவது - நான் கடவுள்
4. மினிஸ்டர் மகன் ஒரு பெண்ணை கெடுப்பது - பல படங்கள்
5. ஹீரோ வில்லன் பலிவாங்கும் படலம் - பல படங்கள்
விஜய் பாடும் முதல் பாட்டு.... விஜய்க்கு முற்றிலும் பொருந்தா gaana குரல் - விஜய் வாய் அசைக்காமல் இருந்திருக்கலாம்.
பிரபு, ராதிகாவுக்கு, ஏன் அமி ஜாக்சனுக்கு கூட அழுத்தம் குறைவான கதாபாத்திரங்கள். இன்னொரு காதலை சொல்ல அமி ஜாக்சனுக்கு வாய்ப்போ அவகாசமோ இல்லை. மொட்டை ராஜேந்திரன்... நீங்கள் இப்படி காமெடி பண்ண ஆரம்பித்தால் இனி உங்களுக்கு வில்லன் கதாபாத்திரத்தை யார் தருவார்கள்?
நம்ப முடியாதா காட்சிகளும் இல்லாமல் இல்லை. இறந்து விட்டாள் என நினைத்த சமந்தா மீண்டும் எழுந்து குழந்தையை மாடிக்கு சென்று எடுத்துவருவது. மினிஸ்டர் மகனை vijay எப்படி கண்டிபிடித்தார் என்பதையே காட்டாமல் அவரை பாலத்தில் தொங்கவிட்டு ஸ்டைலாக போஸ் கொடுக்கும் விஜய். வில்லன் கூட்டத்தை கொல்ல இறந்துபோன DC விஜய்குமாராக வருவது. படமே முடிந்த பிறகு ஒரு பாடல் காட்சி. (Amy Jackson உடன்) பார்பதா போகலாமா என குழம்பிபோய் நின்றபடியே பார்க்கும் மக்கள். இப்படி காட்சிகள் பல இருந்தாலும் படத்தின் வெற்றியை அவை சிறிதும் பாதிக்கவில்லை.
தெறி - கலக்கல் ஹீரோவின் கலக்கல் படம்.
குடும்பத்துடன் பார்க்கலாம்.
70/100
No comments:
Post a Comment