நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே ...
இது நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் P . B ஸ்ரீநிவாஸ் பாடல். இதை மாற்றி எழுதிய படம்தான் சூர்யாவின் 24.
கடந்த காலத்திற்குள் குதித்து 26 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட தனது அம்மாவையும் அப்பாவையும் ஒரு மகனால் காப்பாற்ற முடியுமா? அதை அரிய கண்டுபிடிப்பான "டைம் வாட்ச்" உண்மையாக்கினால்! அது தான் 24 -ன் கதை.
சபாஷ் ! என்ன விறுவிறுப்பான கதை !
அப்பா சூர்யா தனது டைம் வாட்ச் கண்டுபிடிப்பில் வெற்றிபெற... கொக்கு போல் தவம் கிடந்த அண்ணன் சூர்யா வாட்சை கைப்பற்ற போராட... அப்பா சூர்யா மனைவியுடன் கொல்லப்பட... குழந்தையாக தப்பித்த மகன் சூர்யா 26 வருடங்கள் கழித்து அதே வாட்சை அடைய... 26 வருடங்கள் தன் இளமையை கோமாவில் தொலைத்த அண்ணன் சூர்யா மீண்டும் அவதாரம் எடுக்க... மகன் சூர்யா எப்படியோ உண்மையை கண்டுபிடித்து, கடந்த காலத்திற்குள் குதித்து அம்மாவையும் அப்பாவையும் காப்பாற்ற முயல... மீண்டும் குழந்தையாகி போகிறார். (என்ன கொடுமைடா இது?) அப்புறம் அப்பா அம்மா எப்படி உயிர் பிழைத்தார்கள்? அண்ணன் சூர்யாவிற்கு என்ன ஆயிற்று என்பதுதான் கிளைமாக்ஸ். கலக்குறீங்க டைரக்டர் விக்ரம் குமார்...What is done cannot be undone. இது ஷேக்ஸ்பியர் சொன்னது. WHAT IS DONE CAN BE UNDONE. இது சூர்யா இந்த படத்தில் சொல்றது.
அப்பா சூர்யா பெரிய விஞ்ஞானி. ஆனால் அப்பாவி. அண்ணன் சூர்யா வில்லாதி வில்லன். ஆனால் கோமாவில் இளமையை தொலைத்து வீல் சேரில் உட்கார்ந்த பாவி. மகன் சூர்யா காதலி சமந்தாவை கரெக்ட் பண்ண அப்பாவின் டைம் வாட்சை யூஸ் பண்ணும் தீராத விளையாட்டுப் பிள்ளை. ஆனால் 24 மணி மட்டுமே கடந்த காலத்தில் பின்னோக்கி செல்லும் வாட்சை ஒரே நாளில் பல வருடங்கள் பின்னோக்கி செல்லுமாறு மாற்றி அமைக்கும்போது "புலிக்கு பிறந்தது பூனையாகுமா" பிள்ளை. மூணு கெட்டப்பில் இப்படி பட்டையை கிளப்பும் சூர்யா.
இமாஜினோ ரொமன்சொ பீலியாவால் அவதிப்படும் சமந்தா ரசிக்க வைக்கும் காமெடி. சமந்தாவுக்கு புடிக்கும் என்பதால் கடந்த காலத்தில் குதித்து டோனி அடித்த baalai சிக்சரில் இருந்து காப்பாற்றி இந்தியன் கிரிகெட் டீமை வெற்றிபெற செய்யும் சூர்யா - கனவிலும் நினைத்து பார்க்க முடியாத (எந்திரன் படத்தில் காதலிக்காக கொசுவை கொண்டுவரும் ரஜினியையும் ஓவர்டேக் செய்யும்) அச்சாத்தியம். பர்ஸ்ட் சிம்ப்டம் செகண்ட் சிம்ப்டெம் என சூர்யா காதலை விதைக்க வெட்கத்தில் பூரிக்கும் சமந்தா கொள்ளை அழகு. (படத்தோட கடைசியில் இப்படி சின்ன பாப்பாவா மாத்திடிங்கலேய்யா... இது உங்களுக்கே அடுக்குமா?)
பிளஸ் பிளஸ் பிளஸ்
1. H.G. Well's Time Machine நாவலை (யாருக்கும் தெரியாமல்) டைம் வாட்ச் என தமிழ் ரசிகர்களுக்கு தகுந்தாற்போல் ரசிக்கும்படியான விறுவிறுப்பான கதையாக மாற்றி தந்தது
2. கொடுத்த வாக்கிற்காக... வளர்ப்பு மகன் சூர்யாவுக்காக... திருமண வாழ்க்கையையே துறந்த சரண்யா
3. பிரமிக்க வைக்கும் அறிவியல், ரசிக்க வைக்கும் காதல், கண்களை குளமாக்கும் அம்மா மகன் பாசம், மெய்சிலிர்க்க வைக்கும் வில்லத்தனம். காதலியை கரெக்ட் பண்ண டைமை பிரீசாகி வண்டியை பஞ்சராக்கும் காமெடி. இப்படி எல்லாம் கலந்த நிறைவான படம்.
ஏன்? ஏன்? ஏன்?
1. Time Watch எதிர் காலத்தில் செல்ல உதவாதா? இல்லை அப்படி ஒரு சிந்தனை எழவே இல்லையா? (இரண்டாம் பாகத்திற்கு ஒதிக்கி வைத்து விட்டார்களோ என்னவோ?)2. கடந்த காலத்திற்குள் சென்றால் அதை பார்க்கலாம் சரி. மாற்றவுமா முடியும்? அப்படி மாற்ற முடிந்தால் ஏற்கனவே நிகழ் காலத்தில் நடந்தது என்ன ஆகும்? காணாமலா போகும்? (என்னமோ போங்க!)
3. என்னமோ திரவத்தை ஊற்றுகிறார். மின்சாரத்தை பாய்ச்சுகிறார். டைம் வாட்ச் அக்டிவேட் ஆகிறது. எந்த அறிவியல் விதியும் டச் கூட பண்ணவில்லை. பின் எப்படி சயின்ஸ் சினிமா ஆக முடியும்?
நம்ப முடியாததையும் நம்ப வைப்பது கலைஞனின் கைவண்ணம். நமது மகிழ்ச்சியே, பிரமிப்பே அவன் வெற்றி.
அந்த வரிசையில் இது தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சி மலர்.
90/100 குடும்பத்துடன் பார்க்கலாம்.