Saturday 10 September 2016

இரு முகன் - திரை விமர்சனம்



ஹிட்லர் தனது படை பலத்தை பல மடங்கு அதிகரிக்க போரில் வெற்றி பெற பயன்படுத்திய ரகசிய மருந்துதான் ஸ்பீட் .  பல வருடங்களுக்கு பிறகு ரகசியமாக இருந்த அந்த மருந்தை கண்டுபிடித்து பணம் சம்பாதிக்கவும் தீவிரவாதிகளுக்கு ஹெல்ப் பண்ணவும் பயன்படுத்துகிறார் வில்லன் விக்ரம் (பெயர் : லவ் ).  அதை ஹீரோ விக்ரம்,  நயன்தாரா மற்றும் நித்தியா மேனன் உதவியுடன் எப்படி அடியோடு அழிக்கிறார் என்பதுதான் கதை.

படத்தின் விறுவிறுப்புக்கும் பலத்துக்கும் இந்த நாலு தான் காரணம் : 1. ஸ்பீட் - சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி
2. லவ் - வில்லன் விக்ரம் - வித்யாசமான பெண் பாவனையில்.
3. திடீர் திடீர் என வந்து அதிர வைக்கும் ட்விஸ்ட்.- அதுல ரொம்ப பெரிய ட்விஸ்ட்  இடைவேளை ட்விஸ்ட்.  இறந்து போனதா நினைஞ்ச நயன்தாரா மீண்டும் வில்லன் லவ் உடன்.

அது என்ன சயின்ஸ்?  நமக்கு ஆபத்து வரும் போது பயமும் சேர்ந்தே வரும். உடனே அட்ரீனல் சுரப்பி அட்ரீனலின் நாரட்ரீனலின் அப்படிங்கிற ஹார்மோன்களை சுரந்து நமது ரத்த நாளங்களும் தசைகளும் பல மடங்கு பலம் பெற்று நம்மை அந்த ஆபத்திலிருந்து தப்பிக்கவோ அல்லது எதிர்த்து போராடவோ தயார் படுத்தும்.

 இதே ஹார்மோனை செயற்கையாய் ஒருத்தருக்கு 5 நிமிடம் வரை செயல்படவைச்சா அவரடோ சக்தி என்னவெல்லாம் செய்யமுடியும் அப்டிங்கிறதுதான் வில்லன் விக்ரம் பயன் படுத்தும் சயின்ஸ்.  படத்தின் ஆரம்ப சண்டை காட்சியும், கிளைமாக்ஸில் இரண்டு விக்ரமும் மோதும் சண்டைக்காட்சியும் இந்த "ஸ்பீட்" -ஐ வச்சுத்தான்.

எதிரியை கொல்ல ஒரு கெமிக்கல்.  நர்ஸை மயக்கம் போட வைக்க ஒரு சயின்ஸ். டாக்டர்ஸை சிரிக்கவச்சு தப்பிக்க ஒரு சயின்ஸ்.  இப்படி எல்லாத்துக்கும் சயின்ஸை பயன்படுத்தும் வில்லன் விக்ரம் தனது சயின்ஸ் மூலமாவே சாவது கச்சிதம்.

இருமுகம்.  வில்லன் விக்ரம் ஹீரோ விக்ரமை விட ஒரு படி மேல.  என்ன நளினம். என்ன ஸ்மெயில்.  என்ன ஆக்க்ஷன்.  ஆனால் வில்லனை பற்றிய ரகசியத்தை வில்லனே
ஹீரோவிடம்  மணிக்கணக்காய் உளறி கொட்டும் சீனை என்றுதான் தமிழ் சினிமா விடப்போகிறதோ?!

முதுகை காட்ட, சின்ன பிள்ளைங்க போடும் பிராக் போட்டு தொடையை காட்டி ஆட, இப்படி பாட்டுக்கு மட்டும் திடீர் திடீர் என்று நயன்தாராவை கூப்பிடுகிறார்கள்.  "தேவைக்கு" நயன்தாராவை கதையில் பயன்படுத்திக்  கொ(ல் )ள்கிறார்கள்.

 நாலு வருடமா வில்லன் கூட இருந்தும் வில்லன் இவளை சந்தேகமே  படாமல் இருப்பது ஆச்சர்யம்.  ஸ்பீட் எடுத்தால் பலம் வரும்.  இழந்து போன மெமரி கூடவா திரும்ப வரும். சப்பக்கட்டு.

நித்தியா மேனனுக்கும் விக்ரமுக்கும் லவ் வந்துருமோன்னு ரசிகர்கள் எதிர்பார்க்க,  லவ் பண்ணும் மூடில் நம்ம விக்ரம் இப்ப இல்லை என்கிறார் டைரக்டர் ஆனந்த் ஷங்கர்.

நித்தியா மேனனுக்கு பொருத்தமான ரோல். கண்ணியமான நடிப்பு.  ஆனாலும் போலீசாக தெரியாமல் பெண்ணாகவே தெரிகிறார்.  தைரியத்தை விட தியாகமும் இரக்கமும் பூசி உடையில் மட்டுமே போலீசாக...

"ரெண்டு நிமிஷம் அவரோட பேசணும்." இது இந்தியன் போலீஸ்.
"24 மணி நேரத்துக்குள்ள உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்."
"24 மணி நேரத்துக்குள்ள ஸ்பீட் எடுத்து குழந்தை பெத்துக்கலாம்."
இவைகளை தவிர வேறு எந்த டயலாக்கும் உப்பு சப்பில்லாமல் இருக்கிறது.

பாடல்கள் இடை செருகல். படத்தோடு படத்தின் தேவைக்கு பொருந்தவே இல்லை.  நயன் தன்னை மறந்ததுக்கு ஒரு பாட்டு.  ஆனால் பாட்டு முடித்ததுமே ட்விஸ்ட் மூலம் நயனை வித்தியாசமாக காட்டுவது முந்தய பாட்டையே அர்த்தமில்லாமல் ஆக்குகிறது.

தம்பி ராமையா சிரிக்க வைக்கிறார்.  ஆனால் கதையில் அவருக்கு கொடுக்கப்பட்ட ரோல் பல இடங்களில் அவரையே வாய் மூட வைக்கிறது.

இன்னும் கொஞ்சம் காமெடி, நச் நச் டயலாக், பொருத்தமான பாடல்கள், ஸ்பீடுக்கு தகுந்த பலமான நம்பக்கூடிய சண்டை காட்சிகள் இப்படி இருந்திருந்தால் படம் பட்டையை கிளப்பியிருக்கும்.

படம் நல்லாருக்கு.  குடும்பத்தோட பார்க்கலாம்.
 படம் பர்ஸ்ட் கிளாஸ்.  பால்கனி இல்ல.

நம்ம ரேட்டிங். -70/100



Saturday 13 August 2016

ஜோக்கர் - திரை விமர்சனம்


"ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?
எனக்கொரு கவலையில்லே!" என்று வாழ்பவரா நீங்கள்?

''இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு பீ - யை திங்கலாம்" (சென்சார் கட்டே இல்லாமல்!? )  என்று வாய் கூசாமல் சொல்லி  கிளைமாக்சில் சவுக்கடி கொடுக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்.  அப்படி என்னதான்  இருக்கு இந்த படத்துல?

ஒரு சாதாரண குடிமகனுக்கு இந்திய அரசு போடும் திட்டம் போய் சேர்கிறதா ?  அதற்கு பின்னால் என்னதான் நடக்கிறது?  அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளும் அமைச்சர்களும் மொத்த பணத்தையும் கொள்ளையடிக்க திட்டம் போட்டதின் விளைவு என்ன?  அது சாதாரண குடி மகனுக்கு பயன் படா விட்டாலும் பரவாயில்லை. எப்படி மற்றவர்கள் மத்தியில் கோமாளி (ஜோக்கர் ) ஆகும் அளவுக்கு ஒருவனை மனோ ரீதியாக பாதிக்கிறது என்பது தான் கதை.

வழக்கமா தமிழ் சினிமாவில் ஹீரோ - வை அறிமுகப்படுத்துவது நாம் எல்லாம் அறிந்ததுதான்.  (பேக்ரௌண்ட் மியூசிக் கலை கட்ட .... ரசிகர்கள் விசிலடிக்க...)

ஆனால் இங்கு கதையே வேறு.

படம் ஆரம்பித்ததுமே டாய்லெட் -ல் ஹீரோ(குரு சோம சுந்தரம்)...  ஒரு கிராமப்புற குடிசை வீட்டில் உடைஞ்சு போன கக்கூஸ் -ல் கால் கழுவும் காட்சியில் அறிமுகப்படுத்தப்படுகிறார்.  (இப்படி ஒரு காட்சியா? என எல்லோரும் முகம் சுழிக்க ... டாய்லெட்  தான் இந்த படத்தோட  ஹீரோவே  என்பதை பின்னால் பிளாஷ் பேக்கில் புரிய வைக்கிற அழகே தனி )  ஹீரோ பெயர் மன்னர் மன்னர். எல்லோரும் கூப்பிடுவது ஜனாதிபதி.  இசை என்ற பெயரில் ஒரு லேடி பி.ஏ . வேறு.


எங்கெல்லாம் மக்கள் பிரஞ்சனையோ அங்கெல்லாம் சென்று வினோதமான முறையில் (காமெடியாகவும் தான் ) போராடுகிறார்.  யார் இந்த ஜோக்கர்?  இவர் இப்படி மன நிலை பாதிக்கப்பட்டதற்கு யார்  காரணம்?  நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.. ஆழமாக சிந்திக்க வைக்கிறது பிளாஸ் பேக் .

கட்சிக்கூட்டத்திற்கு லாரியில் ஆள் ஏற்றி செல்ல ...அதில் கிராமத்து குயிலும் செல்ல... ஜோக்கருக்கு காதல் மலர்கிறது.  டாய்லெட் இருந்தால் தான் கல்யாணம் பண்ணுவேன்னு காதலி கண்டிஷன் போட... இந்திய  அரசு சுத்தமான இந்தியா திட்டத்தில் இவரது கிராமத்தில் டாய்லெட் கட்டும் திட்டத்திற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட... ஜோக்கரின் திருமணமும் நடக்கிறது.  ஆனால் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை எல்லோரும் காசு அடிக்க,  ஆளுக்கொரு கக்கூஸ் கோப்பையை மட்டும் கொடுத்தனுப்புகிறார்கள்.

ஜனாதிபதியே திட்டத்தை தொடங்கி வைக்க நேரில் வர பிரச்னை ஆரம்பிக்கிறது.  ஜோக்கர் வீட்டுக்கு வெளியே டாய்லெட் கட்டும் பணி அவசரமாக தொடங்குகிறது.  கட்டி முடிக்கப்பட்டதா? ஜோக்கரின் நிறை மாத கர்ப்பிணி மனைவியை அது படுத்த படுக்கையாய் ஆக்கிய கொடூரம் என்ன?  சமூக அவலத்தை எதிர்த்து போராடும் ஜோக்கருக்கு இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் மீதி கதை.

கையில் பணமும் இல்லை.  அந்நியனை போல் முடியை முகத்தில் தொங்கவிட்டு சமூக துரோகிகளை பந்தாட உடம்பில் தெம்பும் இல்லை. பணம் படைத்த, அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அட்டூழியம் செய்யும் அரசியல் வாதிகளுக்கு முன்னால், நம் கதி என்ன?   ஒரு சாதாரண குடிமகனால் முதல் குடிமகன் (ஜனாதிபதி) என்று சொல்லிக் கொண்டு மக்கள் மத்தியில் ஜோக்கராக வலம் வரத்தான் முடியும்.  வேறு என்ன செய்ய முடியும்?
கேட்கிறார் இயக்குனர்.  என்ன யதார்த்தம்!

இந்த ஜோக்கர்  உண்மையிலேயே மன நிலை பாதிக்கப்பட்டவரா?  கடிக்க வந்த எறும்பை கூட பூ போல பிடித்து கீழே இறக்கிவிடும் இவரா?  அடிபட்ட ஆட்டுக்காகவும், ஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுமிக்காகவும் போராடும் இவரா மன நிலை சரியில்லாதவர்?  இதையெல்லாம் பார்த்தும் பார்க்காமலும் போகும் நாம்தான் மன நிலை சரியில்லாதவர்கள்.  சொல்லாமல் சாடுகிறார் இயக்குனர்.
சபாஷ் ராஜு முருகன்!

 வலியால் மரண வேதனையில் துடிக்கிறார் ஜோக்கரின் மனைவி.  கருணை கொலைக்காக விண்ணப்பித்த ஜோக்கரின் கருணை மனு நிராகரிக்கப்படுகிறது.  கருணை கொலை மனிதாபிமானம் அற்ற செயல் என்கிறது இந்திய அரசியல் சாசனம்.  ஆனால் அவளை இந்த நிலைக்கு மரண வேதனைக்கு தள்ளியவர்களை என்ன செய்தது? இது மனிதாபிமானமற்ற செயல் இல்லையா?

 "ஊழல் இல்லாமல் ஒரு திட்டத்தை நிறைவேற்ற வக்கில்லை. உங்களிடம் கருணையை எதிர்பார்த்தது என் தவறுதான்.  நான் தான் ஜனாதிபதி. நானே என் மனைவியை கருணை கொலை செய்கிறேன்." என ஜோக்கர் பொங்கி எழ அரங்கமே கைதட்டலால் அதிர்கிறது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டை கண்டு ஜனாதிபதி ஆட்சியை ஜோக்கர் அமல் படுத்த, சிரிக்கவும் வைக்கிறார். சிந்திக்கவும் வைக்கிறார் இயக்குனர்.

"ஒரு கண்ணில் காந்தி. ஒரு கண்ணில் பகத்சிங்.  பகத்சிங்கை அவுத்துவிடவா?" - என்ன வசனம்யா இது?

"திட்டம் மக்களுக்காகவா ?  இல்ல நீங்க கொள்ளை அடிக்கவா?"



வசனத்தில் வெட்ட வெளிச்சம்.  அனல் பறக்கும் சூடு.  காட்சியில், கதையில், கதாபாத்திரங்களில் யதார்த்தம்.  படத்தோடு ஒட்டிய  பாடல்கள் அத்தனையும் காதுக்கு இனிமை. அறிவுக்கு விழிப்பு.  திரைக்கதையும்  அருமை.

கோடியில் சம்பளம் வாங்கும் பெரிய ஹீரோ இல்லை.  கவர்ச்சி கன்னியாய், அழகு பதுமையாய் ஹன்சிகா இல்லை.  தம்மண்ணா இல்லை.  பெரிய காமெடியன் இல்லை.  அனல் பறக்கும் ஆக்ஷன் இல்லை. வெட்டி சவுண்ட் விடும் வில்லன் இல்லை.  படத்தின் பட்ஜெட்டும் ரொம்ப சிறுசு. கதையையும், நடிப்பையும், காட்சிகளின் யதார்த்தையும் மட்டுமே மூலதனமாக கொண்டு பெரும் வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர்.

படம் தேசிய விருது வாங்குவது உறுதி.

தமிழ் சினிமா இது வரை பார்த்திராத படம்.

ஒவ்வொரு குடிமகனும் பார்க்க வேண்டிய படம்.

நம்ம ரேட்டிங்  - 85/100


Monday 25 July 2016

கபாலி படம் தோல்வியை தழுவியது ஏன் ?


ரஜினியின் ரசிகர்களே கெட்ட கனவாக மறக்க நினைக்கும் அளவுக்கு படம் தோல்வியை தழுவியது ஏன்?

1. படம் நல்லா வரவில்லை எனத் தெரிந்தும் அதற்கு இத்தனை கோடி செலவு செய்து, மக்களிடம் பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது ஏன்?  படத்தை வெளிவராமல் செய்திருந்தால் கூட சூப்பர் ஸ்டார் அவர்களின் இமேஜ், ஒட்டு மொத ரசிகர்களின் உணர்வுகள் தவிடு பொடியாகாமல் இருந்திருக்கும்.  பணம் மட்டுமே இழப்பாக இருந்திருக்கும்.

2. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்,  காட்சி அமைப்பு, பாடல் இப்படி எதுவுமே ஒரு சாதாரண புது முகம் நடிக்கும் படத்தில் கூட இப்படி இருக்காது என்று நினைக்கும் அளவுக்குக்கு கேவலமாக  ஒரு மெகா ஸ்டார் படத்தில் தந்திருப்பது மன வேதனை.  இது சூப்பர் ஸ்டார் அவர்களின் இமேஜை உடைக்க நடந்த திட்டமிட்ட சதியா? என்று கூட எண்ண தோன்றுகிறது.

3. மலேசியாவில் பாதிக்கப்படும் தமிழர்களுக்காக ரஜினி போராடுவதுதான் கதை என்றால் அது நம்பும் படியாக ஒரு சீன் கூட யதார்த்தமாக இல்லை.  அப்படியே அது உண்மை என்றாலும் அதற்கு ரஜினி ஏன் தாதாவாக இருக்க வேண்டும்?  போதைப்பொருள் இல்லை.  விபச்சாரமும் இல்லை.  யாரையும் கொள்ளையடிக்கவும் இல்லை.  நோக்கமும் தமிழர்களுக்காக போராடுவது.  பின் ஹீரோவாகவே இதை அழுத்தமாக சொல்லியிருக்கலாமே! ஏன் தாதா கெட்டப்?

4.கபாலி ரஜினி. பாட்ஷா ரஜினியிடம் ட்யூஷன் எடுக்க வேண்டும்.  ரஜினி படம் என்றாலே குழந்தைகளையும் ஈர்க்கும்  பன்ச் டைலாக், காமெடி, தாய்மார்களுக்கு பிடித்த செண்டிமெண்ட் காட்சிகள், ரசிகர்களை தியேட்டரிலேயே ஆட  வைக்கும் பாடல் காட்சிகள், சண்டை  காட்சிகள் இப்படி ஏராளமாய் இருக்கும்.  எந்திரானோடு  ஒப்பிட்டு பார்த்தால் இது ரஜினி படம்தானா ?  என்றே எண்ண தோன்றுகிறது.

5.  படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள்.  ஹீரோயின் என்ன செய்கிறார்?  படம் முழுக்க மாசமான அம்மாவாக வந்து வந்து போகிறார்.  ஒரே ஒரு சீனை தவிர நடிப்பதற்கு வாய்ப்பே தரவில்லை.  ரஜினியை சராமாரியாக சுடுகிறார்கள் மீண்டும் வந்துவிடுகிறார்.  ஹீரோயினை சராமாரியாக சுடுகிறார்கள் மீண்டும் உயிரோடு காட்டுகிறார்கள்.  ரஜினி மலேசிய தமிழர்களுக்கு உதவி செய்வதாக காட்டும் எந்த காட்சியிலும் உயிர் துடிப்பே இல்லை. ஏகப்பட்ட கையாலாகாத வில்லர்கள் கூட்டம். ரஜினியை வயதான மேக்கப் இல்லாத தோற்றத்தில் காட்டுவது, நீ என் நாயாக இருப்பே என்ற மட்ட ரகமான வசனங்களை வில்லன் பேச அனுமதிப்பது என பல அத்து மீறல்கள்.   இந்த படம் ரஜினிக்கு எதிராக திரை யுலகத்தில் யாரோ திட்டமிட்டு செய்த பழிவாங்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது.  படமும் ஆமை வேகத்தில் கொஞ்சம் கூட விறுவிறுப்பின்றி நகர்கிறது.  நாளைய இயக்குனர் நிகழ்ச்சிகளில் கூட நல்ல நல்ல காட்சிகளை பார்க்கலாம் போல.  ஆனால் ஒரு மெகா ஸ்டார் படத்தில் இப்படி காட்சிகளை இது வரை யாரும் பார்த்திருக்க முடியாது.

படம் முழுக்க ரஜினி பேசும் பன்ச் மகிழ்ச்சி.  ஆனால் இந்த படம் ரஜினிக்கு மட்டுமல்ல, ரஞ்சித்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த திரையுலகத்திற்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய துக்கம்.
ரஜினியை பொறுத்த வரை இது அவருக்கு மிகப்பெரிய விபத்து.
எந்திரன் 2- வில் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பார்  என்று நம்புவோம்.

20/100 இந்த படம் பார்க்கும் படியாக இல்லை.

Saturday 2 July 2016

ஜாக்சன் துரை - திரை விமர்சனம்


இந்திய பேய்களுக்கும் பிரிட்டிஷ் பேய்களுக்கும் நடக்கும் சண்டையை ஹீரோ சிபிராஜ் எப்படி முடிவுக்கு கொண்டுவந்து அயனாவரம் ஊர் மக்களை காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

முதல் பாதி திகில் கலந்த காமெடி. பேய் பங்களாவில் பேய் இருக்கிறதா? அல்லது அந்த ஊர் ப்ரெசிடென்ட் பயமுறுத்த செய்த செட்டப்பா ? என்று சஸ்பென்ஸ் + காமெடி கலந்து கொடுத்திருக்கிறார்கள்.  போலீஸ்க்கு பயந்து துப்பாக்கி கடத்திய இருவர் தெரியாமல் பேய் பங்களாவில் பதுங்க, பிரிட்டிஷ் பேய்களால்  பலியாக, என படத்தின் ஆரம்பமே திகிலுடன் அமர்க்களமாக தொடங்குகிறது.

காமெடிக்கு பஞ்சமில்லை.  பேய் பங்களாவுக்கு உள்ளே காமெடிக்கு கருணாகரனும், வெளியே யோகி பாபுவும்  என வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.  இங்கிலிஷ் நியூஸ்பேப்பரை ஜாக்சன் துரை பங்களாவின் கேட்டில் வைத்தால் காணாமல் போகிறது என யோகி பாபு விளக்க, தொடர்ந்து ஆடு, அரிசி மூட்டை என சகலத்தையும் வாங்கி கொண்டு அட்டகாசம் பண்ணும் பேய் பங்களாவில் 7 நாள் தங்கிவிட்டு உயிரோடு வெளியே வருபவனுக்குத்தான் என் மகள் பிந்து மாதவி என் ஹீரோயின் அப்பா சொல்ல, காதலில் விழுந்த சிபிராஜும், முறை மாமன் கருணாகரனும் சவாலை ஏற்று பேய் பங்காளவிற்குள் நுழைய, ஒவ்வொரு நாளும் எப்படி கழிகிறது என்பதை திகில், ஆக்ஷன், காமெடி, பிளாஷ் பேக் என கலக்கலாக கொடுத்திருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் காலத்தில் இந்த ஊரில் இருந்த ஜாக்சன் என்ற வெள்ளைக்காரன் கொடுமைக்கு பலியானவர்கள் பலர். அதில் இந்திய கொடியை பறக்கவிட போய் உயிரை விட்ட சத்யராஜ் மகளும் ஒருத்தி.  பலி வாங்க சத்யராஜ் போக, ஜாக்சன் சுட, அங்கிருந்த வெடுக்குண்டு பீப்பாய்கள் வெடித்து சிதற சத்தியராஜ் கூட்டாளிகள் மட்டுமல்ல, ஜாக்சனும் குடும்பத்துடன், மற்ற துப்பாக்கி ஏந்திய பிரிட்டிஷ்காரர்களுடன்  பலியாக, அந்த பங்களாவே பேய் பங்களாவாக மாறுகிறது என்பதை ஒரு வெள்ளைக்கார அழகி பேய் கூலாக குளித்துக்கொண்டே சொல்ல பிளாஷ் பேக் ஆக சொல்லும் விதம் - இயக்குனர் தரணிதரனின்  வித்தியாசமான சிந்தனை.

கல்லறையில் செத்து போனதாக சொல்லப்படும் பிந்து மாதவியை சிபிராஜ் தேட, அவளே பேயாகநடித்து  சிபிராஜை துரத்த - கலக்கல் காமெடி.

"அவர்கள் உளவாளிகள்" என கத்திக்கொண்டு ஒவ்வொரு நாளும் சிபிராஜையும் கருணாகரனையும் பேய்கள் துவைத்து எடுக்கும் காட்சி முதல் பாதியில் பயந்து போன குழந்தைகளையும் வயிறு குலுங்க  சிரிக்க வைக்கும் சூப்பர் காமெடி.

 மொட்டை ராஜேந்திரனும் வெள்ளைக்காரன் பக்கமிருந்து சத்யராஜ் பக்கம் கட்சி மாறும் பேயாக காமெடியில் பட்டையை கிளப்புகிறார்.

ஏற்கனவே செத்து போன பேய்கள் இனி ஒருவரை ஒருவரை எப்படி கொல்ல முடியும் என்ற பெரிய ஓட்டையை கூட சிந்திக்க விடாத அளவுக்கு காமெடி கைகொடுத்திருக்கிறது. -சபாஷ்.

சிபிராஜ் பேய் பங்காளவிற்குள் நுழைந்ததும் ஹீரோயின் பிந்து மாதவிக்கு வேலையே இல்லாமல் போகிறது.  அவரையும் பேய் பங்காளவிற்குள் நுழைத்திருந்தால் ஒருவேளை ஓரங்கட்டப்படாமல் அவருக்கும்  நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.

நல்ல படம். குடும்பத்துடன் குழந்தைகளுடன் சிரிக்கலாம்.சும்மா போய்டு  வாங்க பாஸ்.

நம்ம மார்க் - 60 / 100





Monday 27 June 2016

மெட்ரோ (2016) - திரை விமர்சனம்


"திருடாதே பாப்பா திருடாதே!
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது
அதை சட்டம் போட்டு தடுக்குற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது."

இந்த எம்.ஜி.ஆர். பாட்டு தாங்க மெட்ரோ படம்.

"பட்ட பகலில் சென்னையில் துணிகர செயின்பறிப்பு.  பைக்கில் வந்த வாலிபர்கள் கைவரிசை." - இந்த தினசரி நியூஸ்கு  பின்னாடி ஒரு பெரிய கதையே இருக்குன்னு சொல்லியிருக்காரு  டைரக்டர் ஆனந்த கிருஷ்ணன்.

நல்ல மிடில் கிளாஸ் குடும்பம். பொறுப்புள்ள ரிட்டயர்டு அப்பா.  பாசத்தை கொட்டும் அம்மா. லோன் வாங்கி தம்பியை இன்ஜினியரிங் படிக்க வைக்கும் அண்ணன்(ஹீரோ-புதுமுகம் ஷிரிஷ் ). என்னங்க குறை? பேசாம படிப்பை முடிச்சமா நல்ல வேலையில சேர்ந்தமான்னு இல்லாம, கேர்ள்  பிரண்ட் பைக் வாங்க நச்சரிக்க, ஆப்பிள் ஐ போன் வச்சு கிளாஸ்மேட் ஆசை காட்ட செயின் பறிப்பு கூட்டத்திற்குள் நுழைகிறார் தம்பி(சத்யா)....

"ஆசை பட்ட எல்லாத்தையும் காசு இருந்தா வாங்கலாம்
 அம்மாவை வாங்க முடியுமா? " - இந்த பாட்டு இந்த தம்பி காதில விழலையே.... !  மகனின் நடத்தை அறிந்து பதறி போன அம்மா அண்ணனிடம் சொல்ல போனை எடுக்க, அந்த அம்மாவையே துடிதுடிக்க கொன்னு செய்யினை பறித்து செல்லும் காட்சி... வயலென்ட் உச்சம்.  பணப்பேய் புடிச்சா என்ன ஆகும்?  உங்களை யோசிக்க விடாதுங்கறத யோசிச்சி பாருங்க மக்களே!  சொல்கிறார்  டைரக்டர்.

செயின் பறிப்பு கூட்டத்தின் தலைவன் பாபி சிம்ஹ - நல்லவனா இருக்கும் கெட்டவன்.  "நகத்தை வெட்டு. பொண்ணுங்க உடம்புல கீறல் படக் கூடாது. அவங்க நமக்கு குடுக்குற தெய்வம்." - என்ன டிஸிப்ளின் ..!?  "பணம் இருந்தா உலகமே உனக்கு அடிமை "ன்னு தன் கூட்டத்துக்கு போதிக்கும் இவர் ஒரு போதைக்கு அடிமை. கூட இருந்த பாதிக்கப்பட்ட நண்பன் கீறல் மீது கனிவு.  தொழிலில் கண்ணியம்.  கண்டிப்பு. சூப்பர் ஸ்டார் ஸ்டைல். இதோடு  .... முகத்தில் நவரசத்தையும் அள்ளிக் கொட்டும் "அட்ரா சக்கை" கதா பாத்திரம். ஆனால் கதையின் முடிவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல ஒதுங்கி உச்ச கட்ட போதை தலைக்கு ஏற பைத்தியமாகி நிற்பது சப்புன்னு ஏமாற்றமாக (ஆனால் அர்த்தமுள்ளதாக)  இருக்கிறது.

ஒரு  பக்கம் அம்மாவை கொன்னது தம்பின்னு தெரியாம செயின் பறி கும்பலை தேடி வேரோடு பிடுங்க ஆரம்பிக்கிறார் ஹீரோ.  இன்னொரு பக்கம் கூட்ட தலைவனையே போதை ஊசி போட்டு பைத்தியமாக்கிவிட்டு தலைவனாக அவதார மெடுக்கிறார் தம்பி.  இருவரும் கிளை மாக்சில் சந்திக்க, எனக்கு இந்த வாழ்க்கைதான் புடிச்சிருக்குனு சொல்லும் திருந்தவே மனமில்லாத தம்பியின் கதையை,  மனதை கல்லாக்கி கொண்டு முடிக்கிறார் பாசக்கார அண்ணன்.  ஆசைப்பட்ட கேள் பிரண்ட் பக்கத்தில் இல்லை. ஆசை காட்டி தொழிலில் இறக்கிவிட்ட நண்பன் பக்கத்தில் இல்லை.  பாசத்தை கொட்டிய அம்மாவையும் கொலை செய்து உயிரை விடும் தம்பி சாதித்தது என்ன?  - இதற்கு தானா ஆசை பட்டாய் பாலகுமாரா?

"காசேதான் கடவுளடா" - நம்பும் வில்லன் பைத்தியமானதுதான் மிச்சம்.  நம்பும் சத்யாவும்  கொலைகார பாவியாகி கொலையானதுதான் மிச்சம்.  காசு கடவுளா? பேயா ? கேட்கிறது மெட்ரோ படம்.

"பெத்தவங்க பிள்ளைங்களோட ஆசையை நிறைவேத்தலாம்.  ஆனா பேராசையை நிறைவேத்த கூடாது. அதுவே அவங்க கெட்ட வழியில போக காரணமாயிரும்." வில்லனின் பன்ச் டயலாக் எவ்வளவு ஆழமான உண்மை.

பெண்ணே!  நகை மீது ஏன் இந்த மோகம்?  இது உனக்கு அழகா? ஆபத்தா? - மெட்ரோ படம் விடை சொல்கிறது.

ஆணோ பெண்ணோ, வயது வந்த பிள்ளைக்கு வீட்டில் தனி அறை எதுக்கு?  வசதிக்கு மீறின ஆடம்பரம் எதுக்கு?  கெட்டு குட்டி சுவரா போயிருவாங்க... - எச்சரிக்கிறது மெட்ரோ படம்.

ஒரு சில வயலென்ட் காட்சிகளில் மட்டும் (பயமாக இருந்தால் மட்டும் ) பெண்களும் குழந்தைகளும் கண்ணை மூடி கொண்டால் போதும்.  மெட்ரோ படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம், A சர்டிபிகேட்டை தவறாக புரிந்து கொள்ளாமல்...

நம்ம மார்க் - 70/100 .  Click to view the trailer:





Wednesday 25 May 2016

பென்சில் - திரை விமர்சனம்

பென்சில் - அழகாக வரைய நினைத்த  திகில் ஓவியம்

கதை :  தனியார் பள்ளிதான் கதைகளம்.  +2 படிக்கும் ஒரு "பொறுக்கி" மாணவன், பலரும்  கொல்ல துடிக்கும் அளவுக்கு BAD  BOY   -ஆக மாறுகிறான். எத்தனை பேர் அவனை கொலை செய்ய துடிக்கிறார்கள் என காரணத்தையும் காட்சிகளையும் அடுக்குவது முதல் பாதி கதையாக ,  கொலையை செய்தது யார்? என கதாநாயகியும் நாயகனும் டிடெக்டிவ் நாவல் ரேஞ்கில் துப்பறிவது மீதி பாதி.

பள்ளி பருவத்து விடலை காதல், தனியார் பள்ளிகளில் நடக்கும் அட்டுழியங்கள், செல் போன் லேப்டாப் இவற்றால் திசை மாறும் பணக்கார பிள்ளைகளின் நிலை, வழிகாட்டியாக இருக்கவேண்டிய ஆசிரியர்களின் சபலங்கள், இப்படி பல விஷயங்களை  வரைய நினைத்து ஓரளவுக்கு வெற்றியும் பெற்றுள்ளது இந்த பென்சில்.

இது  நல்லாருக்கே!


1. இசை அமைப்பாளர் ஜீ வீ . பிரகாஷ் ஹீரோ வாக, அதுவும் +2 மாணவனாக, அதுவும் அவர் டூயட் பாட்டுக்கு அவரே இசை அமைக்க, சபாஷ் .

2. கண்ணியமாகத்தான் நடிப்பேன் எனும் நமது அழகு கன்னி ஸ்ரீ திவ்யா, கமிஷ்னர் மகளாக ,  +2 படிக்கும் பொண்ணாக ,  துப்பறியும் கதா பாத்திரம் வேறு.  செத்து கிடப்பது கூடப்படிக்கும் பையன்.  இவ்வளவு கூலாவா இன்வேச்டிகஷன் பண்ணுவீங்க? (நீங்க செஞ்சா சரி தாங்..கம்மணி ...!)

3.  காட்சிக்கு காட்சிக்கு விறுவிறுப்பு. அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று ஆவலோடு....கிரைம் நாவல் திரையில்.

4. "பணத்தை கட்டிவிட்டால் கடமை முடிந்தது என நினைக்கும் பெற்றோர்கள் கவனிக்க வேண்டிய தங்கள் பிள்ளைகளின் மறுபக்கம்" :   +2 படிக்கும் மாணவனின் அதிர்ச்சி தரும் அத்து மீறல்கள்.

5. பள்ளி அறையில் மாணவன் பிணம். கொலைகாரர்கள் என சந்தேகப்படும் நபர்கள், துப்பறிபவர்கள்  அங்கும் இங்கும் ஓட்டம்.  மாரத்தான் பயிற்சி என பிரின்சிபால் விளக்கம் கொடுக்க,  ஊர்வசியின் (ISO இன்ஸ்பெக்ஷன். ஆபிசராக) ஆச்சர்யம். பலே காமெடி.

இது நல்லவா இருக்கு?

1.  முதல் பாதியில் வளரும் காதல் பிற் பாதியில் கொலைகாரனை தேடுவதில்  காணமல் "போயே போச்சு "

2.  spy கேமரா,  டீசேர்ஸ் சல்லாபம், மாணவனின் ப்ளாக் மெயில் +2 படிக்கிற பச்ச புள்ளங்க மனச கெடுகிரீங்கலேப்பா! (ஆசிரியரா வேற கொலை காரரா காட்டுறீங்க! என்னமோ போங்க!?)

3.  கிளைமாக்ஸ் எதுக்கு  லாங் லெக்ட்ஷர், டி.வி. சீரியல் அழுகை காட்சிபோல  சப்புன்னு இருக்கே!
சாம்பார நல்லா வெச்சிட்டு கடைசியில உப்பு அள்ளி போட்டுடீங்களே ...பாஸ்!

பென்சில் - ஷார்ப்னரை பிரிந்த பென்சில்
.
40/100
 


Saturday 7 May 2016

24 twenty four - திரை விமர்சனம்




நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை 
நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை 
முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே ...

இது நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில் P . B ஸ்ரீநிவாஸ் பாடல். இதை மாற்றி எழுதிய படம்தான் சூர்யாவின் 24.

கடந்த காலத்திற்குள் குதித்து 26 வருடங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட  தனது   அம்மாவையும் அப்பாவையும் ஒரு மகனால் காப்பாற்ற முடியுமா?  அதை அரிய கண்டுபிடிப்பான "டைம் வாட்ச்" உண்மையாக்கினால்!   அது தான் 24 -ன்  கதை.


சபாஷ் ! என்ன விறுவிறுப்பான கதை !

அப்பா சூர்யா தனது டைம் வாட்ச் கண்டுபிடிப்பில் வெற்றிபெற...  கொக்கு போல் தவம் கிடந்த அண்ணன் சூர்யா வாட்சை கைப்பற்ற போராட... அப்பா சூர்யா மனைவியுடன் கொல்லப்பட...  குழந்தையாக தப்பித்த மகன் சூர்யா 26 வருடங்கள் கழித்து அதே வாட்சை அடைய... 26 வருடங்கள் தன் இளமையை கோமாவில் தொலைத்த அண்ணன் சூர்யா மீண்டும் அவதாரம் எடுக்க...  மகன் சூர்யா எப்படியோ  உண்மையை கண்டுபிடித்து, கடந்த காலத்திற்குள் குதித்து அம்மாவையும் அப்பாவையும் காப்பாற்ற முயல...  மீண்டும் குழந்தையாகி போகிறார். (என்ன கொடுமைடா இது?) அப்புறம் அப்பா அம்மா எப்படி உயிர் பிழைத்தார்கள்?    அண்ணன்  சூர்யாவிற்கு என்ன ஆயிற்று என்பதுதான் கிளைமாக்ஸ்.  கலக்குறீங்க டைரக்டர் விக்ரம் குமார்...

What is done cannot be undone.  இது ஷேக்ஸ்பியர் சொன்னது.  WHAT IS DONE CAN BE UNDONE. இது சூர்யா இந்த படத்தில் சொல்றது.  


அப்பா சூர்யா பெரிய விஞ்ஞானி.  ஆனால் அப்பாவி.  அண்ணன் சூர்யா வில்லாதி வில்லன்.  ஆனால் கோமாவில் இளமையை தொலைத்து வீல் சேரில் உட்கார்ந்த பாவி. மகன் சூர்யா காதலி சமந்தாவை கரெக்ட் பண்ண அப்பாவின் டைம் வாட்சை யூஸ் பண்ணும் தீராத விளையாட்டுப் பிள்ளை.  ஆனால் 24 மணி மட்டுமே கடந்த காலத்தில் பின்னோக்கி செல்லும் வாட்சை ஒரே நாளில் பல வருடங்கள் பின்னோக்கி செல்லுமாறு மாற்றி அமைக்கும்போது "புலிக்கு பிறந்தது பூனையாகுமா" பிள்ளை.   மூணு கெட்டப்பில் இப்படி பட்டையை கிளப்பும் சூர்யா.

இமாஜினோ ரொமன்சொ பீலியாவால் அவதிப்படும் சமந்தா ரசிக்க வைக்கும் காமெடி.  சமந்தாவுக்கு புடிக்கும் என்பதால் கடந்த காலத்தில் குதித்து டோனி அடித்த baalai சிக்சரில் இருந்து காப்பாற்றி இந்தியன் கிரிகெட் டீமை வெற்றிபெற செய்யும் சூர்யா -  கனவிலும் நினைத்து பார்க்க முடியாத (எந்திரன் படத்தில் காதலிக்காக கொசுவை கொண்டுவரும் ரஜினியையும் ஓவர்டேக் செய்யும்) அச்சாத்தியம். பர்ஸ்ட் சிம்ப்டம் செகண்ட் சிம்ப்டெம் என சூர்யா காதலை விதைக்க வெட்கத்தில் பூரிக்கும் சமந்தா கொள்ளை அழகு. (படத்தோட கடைசியில் இப்படி சின்ன பாப்பாவா மாத்திடிங்கலேய்யா... இது உங்களுக்கே அடுக்குமா?)

பிளஸ் பிளஸ் பிளஸ் 

1. H.G. Well's Time Machine நாவலை (யாருக்கும் தெரியாமல்)  டைம் வாட்ச் என தமிழ் ரசிகர்களுக்கு தகுந்தாற்போல் ரசிக்கும்படியான  விறுவிறுப்பான கதையாக மாற்றி தந்தது 

2. கொடுத்த வாக்கிற்காக...  வளர்ப்பு மகன் சூர்யாவுக்காக... திருமண வாழ்க்கையையே துறந்த சரண்யா

3. பிரமிக்க வைக்கும் அறிவியல், ரசிக்க வைக்கும் காதல், கண்களை குளமாக்கும் அம்மா மகன்  பாசம்,  மெய்சிலிர்க்க வைக்கும் வில்லத்தனம். காதலியை கரெக்ட் பண்ண டைமை பிரீசாகி வண்டியை பஞ்சராக்கும் காமெடி.  இப்படி எல்லாம் கலந்த நிறைவான படம்.

ஏன்? ஏன்? ஏன்?

1.  Time Watch எதிர் காலத்தில் செல்ல உதவாதா? இல்லை அப்படி ஒரு சிந்தனை எழவே இல்லையா? (இரண்டாம் பாகத்திற்கு ஒதிக்கி வைத்து விட்டார்களோ என்னவோ?)
2.  கடந்த காலத்திற்குள் சென்றால் அதை பார்க்கலாம் சரி.  மாற்றவுமா முடியும்?  அப்படி மாற்ற முடிந்தால் ஏற்கனவே நிகழ் காலத்தில் நடந்தது என்ன ஆகும்?  காணாமலா போகும்? (என்னமோ போங்க!)
3. என்னமோ திரவத்தை ஊற்றுகிறார்.  மின்சாரத்தை பாய்ச்சுகிறார்.  டைம் வாட்ச் அக்டிவேட் ஆகிறது.  எந்த அறிவியல் விதியும் டச் கூட பண்ணவில்லை.  பின் எப்படி சயின்ஸ் சினிமா ஆக முடியும்?

நம்ப முடியாததையும் நம்ப வைப்பது கலைஞனின் கைவண்ணம்.  நமது மகிழ்ச்சியே, பிரமிப்பே அவன் வெற்றி.

அந்த வரிசையில் இது தமிழ் சினிமாவில் ஒரு குறிஞ்சி மலர்.
90/100  குடும்பத்துடன் பார்க்கலாம்.