Saturday, 13 August 2016

ஜோக்கர் - திரை விமர்சனம்


"ராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?
எனக்கொரு கவலையில்லே!" என்று வாழ்பவரா நீங்கள்?

''இந்த பொழப்பு பொழைக்கிறதுக்கு பீ - யை திங்கலாம்" (சென்சார் கட்டே இல்லாமல்!? )  என்று வாய் கூசாமல் சொல்லி  கிளைமாக்சில் சவுக்கடி கொடுக்கிறார் இயக்குனர் ராஜு முருகன்.  அப்படி என்னதான்  இருக்கு இந்த படத்துல?

ஒரு சாதாரண குடிமகனுக்கு இந்திய அரசு போடும் திட்டம் போய் சேர்கிறதா ?  அதற்கு பின்னால் என்னதான் நடக்கிறது?  அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகளும் அமைச்சர்களும் மொத்த பணத்தையும் கொள்ளையடிக்க திட்டம் போட்டதின் விளைவு என்ன?  அது சாதாரண குடி மகனுக்கு பயன் படா விட்டாலும் பரவாயில்லை. எப்படி மற்றவர்கள் மத்தியில் கோமாளி (ஜோக்கர் ) ஆகும் அளவுக்கு ஒருவனை மனோ ரீதியாக பாதிக்கிறது என்பது தான் கதை.

வழக்கமா தமிழ் சினிமாவில் ஹீரோ - வை அறிமுகப்படுத்துவது நாம் எல்லாம் அறிந்ததுதான்.  (பேக்ரௌண்ட் மியூசிக் கலை கட்ட .... ரசிகர்கள் விசிலடிக்க...)

ஆனால் இங்கு கதையே வேறு.

படம் ஆரம்பித்ததுமே டாய்லெட் -ல் ஹீரோ(குரு சோம சுந்தரம்)...  ஒரு கிராமப்புற குடிசை வீட்டில் உடைஞ்சு போன கக்கூஸ் -ல் கால் கழுவும் காட்சியில் அறிமுகப்படுத்தப்படுகிறார்.  (இப்படி ஒரு காட்சியா? என எல்லோரும் முகம் சுழிக்க ... டாய்லெட்  தான் இந்த படத்தோட  ஹீரோவே  என்பதை பின்னால் பிளாஷ் பேக்கில் புரிய வைக்கிற அழகே தனி )  ஹீரோ பெயர் மன்னர் மன்னர். எல்லோரும் கூப்பிடுவது ஜனாதிபதி.  இசை என்ற பெயரில் ஒரு லேடி பி.ஏ . வேறு.


எங்கெல்லாம் மக்கள் பிரஞ்சனையோ அங்கெல்லாம் சென்று வினோதமான முறையில் (காமெடியாகவும் தான் ) போராடுகிறார்.  யார் இந்த ஜோக்கர்?  இவர் இப்படி மன நிலை பாதிக்கப்பட்டதற்கு யார்  காரணம்?  நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கிறது.. ஆழமாக சிந்திக்க வைக்கிறது பிளாஸ் பேக் .

கட்சிக்கூட்டத்திற்கு லாரியில் ஆள் ஏற்றி செல்ல ...அதில் கிராமத்து குயிலும் செல்ல... ஜோக்கருக்கு காதல் மலர்கிறது.  டாய்லெட் இருந்தால் தான் கல்யாணம் பண்ணுவேன்னு காதலி கண்டிஷன் போட... இந்திய  அரசு சுத்தமான இந்தியா திட்டத்தில் இவரது கிராமத்தில் டாய்லெட் கட்டும் திட்டத்திற்கு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட... ஜோக்கரின் திருமணமும் நடக்கிறது.  ஆனால் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை எல்லோரும் காசு அடிக்க,  ஆளுக்கொரு கக்கூஸ் கோப்பையை மட்டும் கொடுத்தனுப்புகிறார்கள்.

ஜனாதிபதியே திட்டத்தை தொடங்கி வைக்க நேரில் வர பிரச்னை ஆரம்பிக்கிறது.  ஜோக்கர் வீட்டுக்கு வெளியே டாய்லெட் கட்டும் பணி அவசரமாக தொடங்குகிறது.  கட்டி முடிக்கப்பட்டதா? ஜோக்கரின் நிறை மாத கர்ப்பிணி மனைவியை அது படுத்த படுக்கையாய் ஆக்கிய கொடூரம் என்ன?  சமூக அவலத்தை எதிர்த்து போராடும் ஜோக்கருக்கு இறுதியில் என்ன நடந்தது என்பதுதான் மீதி கதை.

கையில் பணமும் இல்லை.  அந்நியனை போல் முடியை முகத்தில் தொங்கவிட்டு சமூக துரோகிகளை பந்தாட உடம்பில் தெம்பும் இல்லை. பணம் படைத்த, அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு அட்டூழியம் செய்யும் அரசியல் வாதிகளுக்கு முன்னால், நம் கதி என்ன?   ஒரு சாதாரண குடிமகனால் முதல் குடிமகன் (ஜனாதிபதி) என்று சொல்லிக் கொண்டு மக்கள் மத்தியில் ஜோக்கராக வலம் வரத்தான் முடியும்.  வேறு என்ன செய்ய முடியும்?
கேட்கிறார் இயக்குனர்.  என்ன யதார்த்தம்!

இந்த ஜோக்கர்  உண்மையிலேயே மன நிலை பாதிக்கப்பட்டவரா?  கடிக்க வந்த எறும்பை கூட பூ போல பிடித்து கீழே இறக்கிவிடும் இவரா?  அடிபட்ட ஆட்டுக்காகவும், ஆழ் துளை கிணற்றில் விழுந்த சிறுமிக்காகவும் போராடும் இவரா மன நிலை சரியில்லாதவர்?  இதையெல்லாம் பார்த்தும் பார்க்காமலும் போகும் நாம்தான் மன நிலை சரியில்லாதவர்கள்.  சொல்லாமல் சாடுகிறார் இயக்குனர்.
சபாஷ் ராஜு முருகன்!

 வலியால் மரண வேதனையில் துடிக்கிறார் ஜோக்கரின் மனைவி.  கருணை கொலைக்காக விண்ணப்பித்த ஜோக்கரின் கருணை மனு நிராகரிக்கப்படுகிறது.  கருணை கொலை மனிதாபிமானம் அற்ற செயல் என்கிறது இந்திய அரசியல் சாசனம்.  ஆனால் அவளை இந்த நிலைக்கு மரண வேதனைக்கு தள்ளியவர்களை என்ன செய்தது? இது மனிதாபிமானமற்ற செயல் இல்லையா?

 "ஊழல் இல்லாமல் ஒரு திட்டத்தை நிறைவேற்ற வக்கில்லை. உங்களிடம் கருணையை எதிர்பார்த்தது என் தவறுதான்.  நான் தான் ஜனாதிபதி. நானே என் மனைவியை கருணை கொலை செய்கிறேன்." என ஜோக்கர் பொங்கி எழ அரங்கமே கைதட்டலால் அதிர்கிறது.

நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர் கேட்டை கண்டு ஜனாதிபதி ஆட்சியை ஜோக்கர் அமல் படுத்த, சிரிக்கவும் வைக்கிறார். சிந்திக்கவும் வைக்கிறார் இயக்குனர்.

"ஒரு கண்ணில் காந்தி. ஒரு கண்ணில் பகத்சிங்.  பகத்சிங்கை அவுத்துவிடவா?" - என்ன வசனம்யா இது?

"திட்டம் மக்களுக்காகவா ?  இல்ல நீங்க கொள்ளை அடிக்கவா?"



வசனத்தில் வெட்ட வெளிச்சம்.  அனல் பறக்கும் சூடு.  காட்சியில், கதையில், கதாபாத்திரங்களில் யதார்த்தம்.  படத்தோடு ஒட்டிய  பாடல்கள் அத்தனையும் காதுக்கு இனிமை. அறிவுக்கு விழிப்பு.  திரைக்கதையும்  அருமை.

கோடியில் சம்பளம் வாங்கும் பெரிய ஹீரோ இல்லை.  கவர்ச்சி கன்னியாய், அழகு பதுமையாய் ஹன்சிகா இல்லை.  தம்மண்ணா இல்லை.  பெரிய காமெடியன் இல்லை.  அனல் பறக்கும் ஆக்ஷன் இல்லை. வெட்டி சவுண்ட் விடும் வில்லன் இல்லை.  படத்தின் பட்ஜெட்டும் ரொம்ப சிறுசு. கதையையும், நடிப்பையும், காட்சிகளின் யதார்த்தையும் மட்டுமே மூலதனமாக கொண்டு பெரும் வெற்றி பெற்றுவிட்டார் இயக்குனர்.

படம் தேசிய விருது வாங்குவது உறுதி.

தமிழ் சினிமா இது வரை பார்த்திராத படம்.

ஒவ்வொரு குடிமகனும் பார்க்க வேண்டிய படம்.

நம்ம ரேட்டிங்  - 85/100


No comments:

Post a Comment