Monday 25 July 2016

கபாலி படம் தோல்வியை தழுவியது ஏன் ?


ரஜினியின் ரசிகர்களே கெட்ட கனவாக மறக்க நினைக்கும் அளவுக்கு படம் தோல்வியை தழுவியது ஏன்?

1. படம் நல்லா வரவில்லை எனத் தெரிந்தும் அதற்கு இத்தனை கோடி செலவு செய்து, மக்களிடம் பலத்த எதிர்பார்ப்பை உண்டாக்கியது ஏன்?  படத்தை வெளிவராமல் செய்திருந்தால் கூட சூப்பர் ஸ்டார் அவர்களின் இமேஜ், ஒட்டு மொத ரசிகர்களின் உணர்வுகள் தவிடு பொடியாகாமல் இருந்திருக்கும்.  பணம் மட்டுமே இழப்பாக இருந்திருக்கும்.

2. கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்,  காட்சி அமைப்பு, பாடல் இப்படி எதுவுமே ஒரு சாதாரண புது முகம் நடிக்கும் படத்தில் கூட இப்படி இருக்காது என்று நினைக்கும் அளவுக்குக்கு கேவலமாக  ஒரு மெகா ஸ்டார் படத்தில் தந்திருப்பது மன வேதனை.  இது சூப்பர் ஸ்டார் அவர்களின் இமேஜை உடைக்க நடந்த திட்டமிட்ட சதியா? என்று கூட எண்ண தோன்றுகிறது.

3. மலேசியாவில் பாதிக்கப்படும் தமிழர்களுக்காக ரஜினி போராடுவதுதான் கதை என்றால் அது நம்பும் படியாக ஒரு சீன் கூட யதார்த்தமாக இல்லை.  அப்படியே அது உண்மை என்றாலும் அதற்கு ரஜினி ஏன் தாதாவாக இருக்க வேண்டும்?  போதைப்பொருள் இல்லை.  விபச்சாரமும் இல்லை.  யாரையும் கொள்ளையடிக்கவும் இல்லை.  நோக்கமும் தமிழர்களுக்காக போராடுவது.  பின் ஹீரோவாகவே இதை அழுத்தமாக சொல்லியிருக்கலாமே! ஏன் தாதா கெட்டப்?

4.கபாலி ரஜினி. பாட்ஷா ரஜினியிடம் ட்யூஷன் எடுக்க வேண்டும்.  ரஜினி படம் என்றாலே குழந்தைகளையும் ஈர்க்கும்  பன்ச் டைலாக், காமெடி, தாய்மார்களுக்கு பிடித்த செண்டிமெண்ட் காட்சிகள், ரசிகர்களை தியேட்டரிலேயே ஆட  வைக்கும் பாடல் காட்சிகள், சண்டை  காட்சிகள் இப்படி ஏராளமாய் இருக்கும்.  எந்திரானோடு  ஒப்பிட்டு பார்த்தால் இது ரஜினி படம்தானா ?  என்றே எண்ண தோன்றுகிறது.

5.  படத்தில் ஏகப்பட்ட ஓட்டைகள்.  ஹீரோயின் என்ன செய்கிறார்?  படம் முழுக்க மாசமான அம்மாவாக வந்து வந்து போகிறார்.  ஒரே ஒரு சீனை தவிர நடிப்பதற்கு வாய்ப்பே தரவில்லை.  ரஜினியை சராமாரியாக சுடுகிறார்கள் மீண்டும் வந்துவிடுகிறார்.  ஹீரோயினை சராமாரியாக சுடுகிறார்கள் மீண்டும் உயிரோடு காட்டுகிறார்கள்.  ரஜினி மலேசிய தமிழர்களுக்கு உதவி செய்வதாக காட்டும் எந்த காட்சியிலும் உயிர் துடிப்பே இல்லை. ஏகப்பட்ட கையாலாகாத வில்லர்கள் கூட்டம். ரஜினியை வயதான மேக்கப் இல்லாத தோற்றத்தில் காட்டுவது, நீ என் நாயாக இருப்பே என்ற மட்ட ரகமான வசனங்களை வில்லன் பேச அனுமதிப்பது என பல அத்து மீறல்கள்.   இந்த படம் ரஜினிக்கு எதிராக திரை யுலகத்தில் யாரோ திட்டமிட்டு செய்த பழிவாங்கும் நடவடிக்கையாகவே தெரிகிறது.  படமும் ஆமை வேகத்தில் கொஞ்சம் கூட விறுவிறுப்பின்றி நகர்கிறது.  நாளைய இயக்குனர் நிகழ்ச்சிகளில் கூட நல்ல நல்ல காட்சிகளை பார்க்கலாம் போல.  ஆனால் ஒரு மெகா ஸ்டார் படத்தில் இப்படி காட்சிகளை இது வரை யாரும் பார்த்திருக்க முடியாது.

படம் முழுக்க ரஜினி பேசும் பன்ச் மகிழ்ச்சி.  ஆனால் இந்த படம் ரஜினிக்கு மட்டுமல்ல, ரஞ்சித்துக்கு மட்டுமல்ல, ஒட்டு மொத்த திரையுலகத்திற்கும், ரஜினி ரசிகர்களுக்கும் மிகப்பெரிய துக்கம்.
ரஜினியை பொறுத்த வரை இது அவருக்கு மிகப்பெரிய விபத்து.
எந்திரன் 2- வில் மீண்டும் விஸ்வரூபம் எடுப்பார்  என்று நம்புவோம்.

20/100 இந்த படம் பார்க்கும் படியாக இல்லை.

Saturday 2 July 2016

ஜாக்சன் துரை - திரை விமர்சனம்


இந்திய பேய்களுக்கும் பிரிட்டிஷ் பேய்களுக்கும் நடக்கும் சண்டையை ஹீரோ சிபிராஜ் எப்படி முடிவுக்கு கொண்டுவந்து அயனாவரம் ஊர் மக்களை காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

முதல் பாதி திகில் கலந்த காமெடி. பேய் பங்களாவில் பேய் இருக்கிறதா? அல்லது அந்த ஊர் ப்ரெசிடென்ட் பயமுறுத்த செய்த செட்டப்பா ? என்று சஸ்பென்ஸ் + காமெடி கலந்து கொடுத்திருக்கிறார்கள்.  போலீஸ்க்கு பயந்து துப்பாக்கி கடத்திய இருவர் தெரியாமல் பேய் பங்களாவில் பதுங்க, பிரிட்டிஷ் பேய்களால்  பலியாக, என படத்தின் ஆரம்பமே திகிலுடன் அமர்க்களமாக தொடங்குகிறது.

காமெடிக்கு பஞ்சமில்லை.  பேய் பங்களாவுக்கு உள்ளே காமெடிக்கு கருணாகரனும், வெளியே யோகி பாபுவும்  என வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.  இங்கிலிஷ் நியூஸ்பேப்பரை ஜாக்சன் துரை பங்களாவின் கேட்டில் வைத்தால் காணாமல் போகிறது என யோகி பாபு விளக்க, தொடர்ந்து ஆடு, அரிசி மூட்டை என சகலத்தையும் வாங்கி கொண்டு அட்டகாசம் பண்ணும் பேய் பங்களாவில் 7 நாள் தங்கிவிட்டு உயிரோடு வெளியே வருபவனுக்குத்தான் என் மகள் பிந்து மாதவி என் ஹீரோயின் அப்பா சொல்ல, காதலில் விழுந்த சிபிராஜும், முறை மாமன் கருணாகரனும் சவாலை ஏற்று பேய் பங்காளவிற்குள் நுழைய, ஒவ்வொரு நாளும் எப்படி கழிகிறது என்பதை திகில், ஆக்ஷன், காமெடி, பிளாஷ் பேக் என கலக்கலாக கொடுத்திருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் காலத்தில் இந்த ஊரில் இருந்த ஜாக்சன் என்ற வெள்ளைக்காரன் கொடுமைக்கு பலியானவர்கள் பலர். அதில் இந்திய கொடியை பறக்கவிட போய் உயிரை விட்ட சத்யராஜ் மகளும் ஒருத்தி.  பலி வாங்க சத்யராஜ் போக, ஜாக்சன் சுட, அங்கிருந்த வெடுக்குண்டு பீப்பாய்கள் வெடித்து சிதற சத்தியராஜ் கூட்டாளிகள் மட்டுமல்ல, ஜாக்சனும் குடும்பத்துடன், மற்ற துப்பாக்கி ஏந்திய பிரிட்டிஷ்காரர்களுடன்  பலியாக, அந்த பங்களாவே பேய் பங்களாவாக மாறுகிறது என்பதை ஒரு வெள்ளைக்கார அழகி பேய் கூலாக குளித்துக்கொண்டே சொல்ல பிளாஷ் பேக் ஆக சொல்லும் விதம் - இயக்குனர் தரணிதரனின்  வித்தியாசமான சிந்தனை.

கல்லறையில் செத்து போனதாக சொல்லப்படும் பிந்து மாதவியை சிபிராஜ் தேட, அவளே பேயாகநடித்து  சிபிராஜை துரத்த - கலக்கல் காமெடி.

"அவர்கள் உளவாளிகள்" என கத்திக்கொண்டு ஒவ்வொரு நாளும் சிபிராஜையும் கருணாகரனையும் பேய்கள் துவைத்து எடுக்கும் காட்சி முதல் பாதியில் பயந்து போன குழந்தைகளையும் வயிறு குலுங்க  சிரிக்க வைக்கும் சூப்பர் காமெடி.

 மொட்டை ராஜேந்திரனும் வெள்ளைக்காரன் பக்கமிருந்து சத்யராஜ் பக்கம் கட்சி மாறும் பேயாக காமெடியில் பட்டையை கிளப்புகிறார்.

ஏற்கனவே செத்து போன பேய்கள் இனி ஒருவரை ஒருவரை எப்படி கொல்ல முடியும் என்ற பெரிய ஓட்டையை கூட சிந்திக்க விடாத அளவுக்கு காமெடி கைகொடுத்திருக்கிறது. -சபாஷ்.

சிபிராஜ் பேய் பங்காளவிற்குள் நுழைந்ததும் ஹீரோயின் பிந்து மாதவிக்கு வேலையே இல்லாமல் போகிறது.  அவரையும் பேய் பங்காளவிற்குள் நுழைத்திருந்தால் ஒருவேளை ஓரங்கட்டப்படாமல் அவருக்கும்  நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.

நல்ல படம். குடும்பத்துடன் குழந்தைகளுடன் சிரிக்கலாம்.சும்மா போய்டு  வாங்க பாஸ்.

நம்ம மார்க் - 60 / 100