Saturday 2 July 2016

ஜாக்சன் துரை - திரை விமர்சனம்


இந்திய பேய்களுக்கும் பிரிட்டிஷ் பேய்களுக்கும் நடக்கும் சண்டையை ஹீரோ சிபிராஜ் எப்படி முடிவுக்கு கொண்டுவந்து அயனாவரம் ஊர் மக்களை காப்பாற்றுகிறார் என்பதுதான் கதை.

முதல் பாதி திகில் கலந்த காமெடி. பேய் பங்களாவில் பேய் இருக்கிறதா? அல்லது அந்த ஊர் ப்ரெசிடென்ட் பயமுறுத்த செய்த செட்டப்பா ? என்று சஸ்பென்ஸ் + காமெடி கலந்து கொடுத்திருக்கிறார்கள்.  போலீஸ்க்கு பயந்து துப்பாக்கி கடத்திய இருவர் தெரியாமல் பேய் பங்களாவில் பதுங்க, பிரிட்டிஷ் பேய்களால்  பலியாக, என படத்தின் ஆரம்பமே திகிலுடன் அமர்க்களமாக தொடங்குகிறது.

காமெடிக்கு பஞ்சமில்லை.  பேய் பங்களாவுக்கு உள்ளே காமெடிக்கு கருணாகரனும், வெளியே யோகி பாபுவும்  என வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள்.  இங்கிலிஷ் நியூஸ்பேப்பரை ஜாக்சன் துரை பங்களாவின் கேட்டில் வைத்தால் காணாமல் போகிறது என யோகி பாபு விளக்க, தொடர்ந்து ஆடு, அரிசி மூட்டை என சகலத்தையும் வாங்கி கொண்டு அட்டகாசம் பண்ணும் பேய் பங்களாவில் 7 நாள் தங்கிவிட்டு உயிரோடு வெளியே வருபவனுக்குத்தான் என் மகள் பிந்து மாதவி என் ஹீரோயின் அப்பா சொல்ல, காதலில் விழுந்த சிபிராஜும், முறை மாமன் கருணாகரனும் சவாலை ஏற்று பேய் பங்காளவிற்குள் நுழைய, ஒவ்வொரு நாளும் எப்படி கழிகிறது என்பதை திகில், ஆக்ஷன், காமெடி, பிளாஷ் பேக் என கலக்கலாக கொடுத்திருக்கிறார்கள்.

பிரிட்டிஷ் காலத்தில் இந்த ஊரில் இருந்த ஜாக்சன் என்ற வெள்ளைக்காரன் கொடுமைக்கு பலியானவர்கள் பலர். அதில் இந்திய கொடியை பறக்கவிட போய் உயிரை விட்ட சத்யராஜ் மகளும் ஒருத்தி.  பலி வாங்க சத்யராஜ் போக, ஜாக்சன் சுட, அங்கிருந்த வெடுக்குண்டு பீப்பாய்கள் வெடித்து சிதற சத்தியராஜ் கூட்டாளிகள் மட்டுமல்ல, ஜாக்சனும் குடும்பத்துடன், மற்ற துப்பாக்கி ஏந்திய பிரிட்டிஷ்காரர்களுடன்  பலியாக, அந்த பங்களாவே பேய் பங்களாவாக மாறுகிறது என்பதை ஒரு வெள்ளைக்கார அழகி பேய் கூலாக குளித்துக்கொண்டே சொல்ல பிளாஷ் பேக் ஆக சொல்லும் விதம் - இயக்குனர் தரணிதரனின்  வித்தியாசமான சிந்தனை.

கல்லறையில் செத்து போனதாக சொல்லப்படும் பிந்து மாதவியை சிபிராஜ் தேட, அவளே பேயாகநடித்து  சிபிராஜை துரத்த - கலக்கல் காமெடி.

"அவர்கள் உளவாளிகள்" என கத்திக்கொண்டு ஒவ்வொரு நாளும் சிபிராஜையும் கருணாகரனையும் பேய்கள் துவைத்து எடுக்கும் காட்சி முதல் பாதியில் பயந்து போன குழந்தைகளையும் வயிறு குலுங்க  சிரிக்க வைக்கும் சூப்பர் காமெடி.

 மொட்டை ராஜேந்திரனும் வெள்ளைக்காரன் பக்கமிருந்து சத்யராஜ் பக்கம் கட்சி மாறும் பேயாக காமெடியில் பட்டையை கிளப்புகிறார்.

ஏற்கனவே செத்து போன பேய்கள் இனி ஒருவரை ஒருவரை எப்படி கொல்ல முடியும் என்ற பெரிய ஓட்டையை கூட சிந்திக்க விடாத அளவுக்கு காமெடி கைகொடுத்திருக்கிறது. -சபாஷ்.

சிபிராஜ் பேய் பங்காளவிற்குள் நுழைந்ததும் ஹீரோயின் பிந்து மாதவிக்கு வேலையே இல்லாமல் போகிறது.  அவரையும் பேய் பங்காளவிற்குள் நுழைத்திருந்தால் ஒருவேளை ஓரங்கட்டப்படாமல் அவருக்கும்  நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கலாம்.

நல்ல படம். குடும்பத்துடன் குழந்தைகளுடன் சிரிக்கலாம்.சும்மா போய்டு  வாங்க பாஸ்.

நம்ம மார்க் - 60 / 100