Friday 12 February 2016

ஜில் ஜங் ஜக் - கலைஞர்களின் கலக்கல் கைவண்ணம்



படத்தின் வெற்றி என்பது மக்களின் எதிபார்ப்பை பொறுத்ததல்ல.  கலைஞர்களின் கைவரிசையை பொறுத்தது.  வழக்கமான மசாலா கதை, குத்துப்பாட்டு,  கிளாமர் சாங், அரைத்த மாவை அரைத்தது போன்ற எந்த விஷயமும் இல்லாமல் ( ஹீரோயின் கூட இல்லாமல் ) தமிழ் சினிமா மரபை உடைத்துக் காட்டி துணிச்சலாக வெளிவந்துள்ள படம்தான் இந்த ஜில்.....

கதை :
ஒரு வரியில் :
                    "ஊழ் வினை உருண்டு வந்து உதைக்கும்."
கொஞ்சம் விபரமாக :
 ராவுத்தர் (ராதாரவி), தெய்வநாயகம் (அமரேந்திரன்) இருவரும் பரம எதிரிகள். பெரிய ரௌடிகள் (!?)  ஜில் (சித்தார்த் ), ஜங் (அவினாஷ் ரகுதேவன் ), ஜக் (சனந் ரெட்டி ) மூவரும் தெய்வ நாயகம் கொடுத்த வேலையை முடிக்க கிளம்பி, விதியின் கையில் பந்தாடப்பட்டு, ராவுத்தரிடமும் மாட்டிக்கொண்டு கடைசியில் மதியால் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கலக்கலான காமடிக் கதை.

விமர்சனம்:

வழக்கமான மசாலா படத்தை எதிர்பார்ப்பவர்களுக்கு,  பொறுமை இல்லாதவர்களுக்கு, கலையை ரசிக்க தெரியாதவர்களுக்கு,  இது செம கடி. பெருத்த "ஏ" மாற்றம்.  ஆனால் புதுமையை விரும்புபவர்களுக்கு, கலைஞர்களின் மிரட்டல் அடியை பார்க்க ஆசைப்படுபவர்களுக்கு   இது வரப்பிரசாதம்.

நிஜ வாழ்கையில் அடுத்து என்ன நடக்கும்னு யாருக்கும் தெரியாது.  இந்த படத்திலும் அப்படித்தான்.  கலையின் அழகு சொல்லாமல் சொல்வது. சொல்லாததை சொல்வது. யாரும் அதை சொல்ல முடியாதபடிக்கு சொல்வது.
ஜில் ஜங் ஜக் -ம் அப்படித்தான். புதுமைகளின் உச்சம்.


ஜில்.  விதியை மதியால் வெல்லலாம் - எடுத்துக்காட்டு .  விதி சதி செய்யும் போது மதி கொண்டு நிலைமையை கூல் ஆக்கும் சித்தார்த் ஜில் தானே!  வீர வசனம் பேசும் ஹீரோ இல்லை.  உத்தம புத்திரனும் இல்லை.
புத்திசாலி.  திறமையானவன். என்ன யதார்த்தம்!



 ஜக். Little Knowledge is Dangerous.  விளையாட்டு வினையாகும் - எடுத்துக்காட்டு.   கார் ஓட்டுவதில் திறமைசாலி. ஆனால் ஜொள்ளு பார்ட்டி. கலர் கூட கண்டுபிடிக்க தெரியாத முட்டாள்.   கோலி குண்டு ஆடி  தனது சாகசத்தை காட்ட ராவுத்தரின் பெட்ரோல் கிடங்கே அழிய, கதை சூடு பிடிக்கிறது.  காமெடி கலக்கல்.



ராவுத்தர், தெய்வ நாயகம்.  காசே தான்  கடவுளடா.  வாழ்வே மாயம்.  பிரதிபலிப்பு.  ராவுத்தருக்கு அசையும் சொத்து ( உடல் -கேன்சர் ), அசையா சொத்து (பெட்ரோல் கிடங்கு ) இரண்டும் அவுட். தெய்வ நாயகத்துக்கு கடத்தலில் சேர்த்த எல்லாம் காணாமல் போச்சு. ஆனாலும் பணத்தாசை. முடிவு யாரும் எதிர்பார்க்காதது.  ஊழ் வலியது.  எவ்வளவு ஆழமான கதாபாத்திரங்கள்!  சபாஷ்.

எல்லா பாத்திரங்களுமே தனித்தன்மையில் பட்டையை கிளப்புகிறது.  சாதாரணம் போல் தெரிவது.  ஆனால், நம்மை திடுக்கிட செய்வது.  நமது எதிர்பார்பை துவசம் செய்வதே அவர்களின் வேலை. படத்தின் பெயரில் தொடங்கி, வசனங்கள், காட்சி அமைப்பு, பாட்டு, பின்னணி இசை, முதல் பாதி ரொம்ப சிறியது.  பின் பாதி ரொம்ப பெருசு, அப்பப்போ மர்மமாக வரும் சித்திரங்கள், வாசகங்கள், செட்டிங் 2020 -ல் இப்படி  எல்லாத்திலும் புதுமை.  இயக்குனர் தீரஜ் வைத்திக்கு உடம்பெல்லாம் (கலைஞனின் ) மூளை.



90/100  இது தாண்டா CREATIVITY.